மஹாபாரதம்
நர நாராயணர்கள்
இப்படிப் போர் மூர்க்கமான முறையில் நடந்து கொண்டிருக்கையில், நரனும், நாராயணனும் களத்தில் இறங்கினர்.(19) நரனின் கைகளில் தெய்வீகமான வில்லைக் கண்ட நாராயணன், தானவர்களை அழிக்கும் தனது ஆயுதமான சக்கராயுதத்தை மனத்தில் நினைத்தான்.(20) எதிரிகளை அழிப்பதும், அக்னியையொத்த ஒளிகொண்டதும், போர்க்களத்தில் பயங்கரமானதுமான அந்தச் சுதர்சனச் சக்கரம், நினைத்த மாத்திரத்தில் வானிலிருந்து வந்தது.(21) அது {சுதர்சனம்} வந்ததும், பெரும் ஆற்றலுடையவனும், யானையின் துதிக்கைப் போன்ற கைகளையுடையவனுமான நாராயணன், இயல்புக்கு மீறிய காந்தியுடையதும், எரியும் தீயைப் போன்றதும், பயங்கரமானதும், எதிரிகளின் நகரங்களை அழிக்க வல்லதுமான அந்த ஆயுதத்தைப் பெரும் வேகத்தோடு வீசினான்.(22) யுக முடிவின் போது நெருப்பு எப்படி அனைத்தையும் உட்கொள்ளுமோ அப்படி, தீப்போன்று ஒளிர்ந்த அந்தச் சக்கரம் நாராயணனால் வேகமாக வீசப்பட்டவுடன் தொடர்ந்து எல்லா இடங்களிலும் விழுந்து தைத்தியர்களையும், தானவர்களையும் ஆயிரக்கணக்கில் எரித்தது.(23) சில நேரம் தீப்போல எரிந்து அவர்களை உட்கொண்டது, சில நேரம் வானிலிருந்து இறங்கிவந்து தாக்கியது, சில நேரம் பூதத்தைப் போல அவர்களின் உயிரைக் குடித்தது.(24)
மறுபுறத்தில் பெரும்பலம் பொருந்தியவர்களும், நெஞ்சுறுதி கொண்டவர்களுமான தானவர்கள், மழை பொழிந்த வெண்ணிற மேகங்களைப் போல் வானில் கிளம்பி, ஆயிரக்கணக்கான மலைகளை வீசி தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினர்.(25) மரங்களுடையதும், சமமான சிகரங்களுடையதுமான {சிகரங்கள் சரிந்ததுமான} அந்தப் பயங்கரமான மலைகள், வானிலிருந்து விழும்போது ஒன்றோடொன்று மோதிக்கொண்டு பெறும் உறுமல் ஒலியை உண்டாக்கின.(26) ஆயிரக்கணக்கான வீரர்கள் இடைவெளியின்றிக் கூச்சலிட்டதாலும், மலைகள் அதிலிருக்கும் காடுகளுடன் கீழே விழுந்ததாலும், காடுகளுடன் கூடிய பூமியானது நடுங்கிற்று. இப்படித் கணங்களும் {ருத்ரனைத் தொடர்பவர்கள்} அசுரர்களும் மோதிக்கொண்டிருக்கையில்,(27) நரன் தோன்றி, தனது பொன்தலைக் கணைகளால் அந்த மலைகளைத் தூள் தூளாக்கி சொர்க்கத்தைப் புழுதியால் மறைத்தான்.(28) இப்படித் தேவர்களால் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டதாலும், குழப்பப்பட்டதாலும் சீற்றமிகுந்த சக்கரமானது சொர்க்கத்தின் பகுதிகளையும் எரிகின்ற தழல் போலக் கலங்கடித்து அழுக்ககற்றி வருவதாலும், வலிமை வாய்ந்த தானவர்கள் பூமியின் குடலுக்குள்ளும், {பாதாளத்துக்குள்ளும்}, உப்பு நீர் கடலிலும் புகுந்தனர்.(29) வெற்றியடைந்த தேவர்கள், மந்தர மலைக்குத் தக்க மரியாதைகள் செய்து, அஃதை அதன் பழைய அடித்தளத்திலேயே {அது முன்பு இருந்த இடத்திலேயே} மீண்டும் நிறுவினர். அமுதுண்ட தேவர்கள் அவர்களது உற்சாகக்குரலால் தேவலோகத்தை எதிரொலிக்கச் செய்து விட்டு அவரவர் இருப்பிடத்திற்குச் சென்றனர்.(30,31) தேவர்கள் தேவலோகத்திற்கு வந்து உற்சாகமாக இருந்தனர். இந்திரனும் பிற தேவர்களும் அமுதத்தைப் பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பை நாராயணனிடம் கொடுத்தார்கள்"
http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section19.html?m=1
ஓ! பாரதா {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் சந்தனுவின் மகனான பீஷ்மர், துரியோதனனிடம், “ஒரு காலத்தில், பிருஹஸ்பதியும் சுக்ரனும் {சுக்ராச்சாரியரும்} [1] பிரம்மனிடம்சென்றார்கள். இந்திரனோடு சேர்ந்து மருதர்களும், அக்னியோடு சேர்ந்து வசுக்களும், ஆதித்தியர்களும், சத்யஸ்களும் {சாத்தியர்களும்}, ஏழு தெய்வீக முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, கந்தர்வர்களும், விஸ்வவசு மற்றும் அப்சரஸ்சுகளின் அழகிய குலமும் அந்தப் பழமையான பெரும்பாட்டனை {பிரம்மனை} அணுகினார்கள். அந்த அண்டத்தின் தலைவனை {பிரம்மனை} வணங்கிய சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, அவனை {பிரம்மனைச்} சுற்றி அமர்ந்தனர். அதே நேரத்தில், தங்கள் மனங்களால் தங்கள் சக்தியை தங்களுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல, பழமையான இரு தெய்வங்களான முனிவர்கள் நரனும், நாராயணனும், அங்கே இருந்த அனைவரின் சக்திகளையும் இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
[1] இங்கே கங்குலியில் Sakra என்று இருக்கிறது. ஆனால் உடனே அதைத் தொடர்ந்து, The Maruts also with Indra என்ற சொற்களும் தொடர்வதால், அது Sukra என்றிருக்க வேண்டும் என்று கருதியே இங்கே சுக்ராச்சாரியர் என்று இட்டிருக்கிறேன். வேறு பதிப்புகளில் இங்கே சுக்கிராச்சாரியர் என்றே இருக்கிறது.
அதன்பேரில், பிருஹஸ்பதி பிரம்மனிடம், “உம்மை வழிபடாமல் இந்த இடத்தை விட்டுச் செல்லும் இந்த இருவரும் யார்? ஓ பெரும்பாட்டனே {பிரம்மனே}, எங்களுக்குச் சொல்லும். இவர்கள் யார்?” என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மன், “தவத்தகுதியுடையவர்களும், தங்கள் பேரொளி மற்றும் அழகால் சுடர்விட்டு, பூமி, சொர்க்கம் ஆகிய இரண்டுக்கும் ஒளியூட்டுபவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், அனைத்திலும் ஊடுருவி, அனைத்தையும் கடந்திருப்பவர்களுமான இந்த இருவரும், வேறு உலகத்தில் இருந்து வந்து, தற்போது இங்கே வசித்து வரும் நரனும், நாராயணனும் ஆவார்கள். பெரும் வலிமையும் ஆற்றலும் உடைய அவர்கள், தங்கள் சொந்த தவத்தின் விளைவால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் செயல்களால் அவர்கள் உலகத்தின் மகிழ்ச்சிக்கு எப்போதும் பங்களித்து வருகிறார்கள். தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடப்படும் அவர்கள் {நரனும் நாராயணனும்}, அசுரர்களின் அழிவுக்காக மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்” என்றான் {பிரம்மன்}”
பீஷ்மர் தொடர்ந்தார்,“இவ்வார்த்தைகளைக் கேட்ட சக்ரன் {இந்திரன்}, அவ்விருவரும் {நரனும், நாராயணனும்} தவம்பயின்று கொண்டிருந்த இடத்திற்கு, பிருஹஸ்பதி முதலான அனைத்துத் தேவர்களுடன் சென்றான். அந்நேரத்தில், சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, தங்களுக்கும், அசுரர்களும் இடையில் ஏற்பட்டிருந்த போரின் விளைவை எண்ணி மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.
ஒப்பற்றிருந்த அந்த இருவரிடமும், இந்திரன் ஒரு வரத்தைத் தருமாறு வேண்டினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா}, இப்படிக் கேட்கப்பட்டதும், அந்த இருவரும், “வரத்தைக் கேள்?” என்றனர். அதற்குச் சக்ரன் {இந்திரன்} அவர்களிடம் {நரன் மற்றும் நாராயணனிடம்}, “எங்களுக்கு உங்கள் உதவியைக் கொடும்” என்றான். அதற்கு அவர்கள் சக்ரனிடம் {இந்திரனிடம்}, “நீ விரும்பியதை நாங்கள் செய்வோம்” என்றனர். பிறகு, அவர்களது உதவியைக் கொண்ட சக்ரன் {இந்திரன்}, அதன் தொடர்ச்சியாகத் தைத்தியர்களையும், தானவர்களையும் [2] வீழ்த்தினான். எதிரிகளைத் தண்டிப்பவனான நரன், பௌலோமர்கள் மற்றும் காலகஞ்சர்கள் மத்தியில் இருந்த இந்திரனின் எதிரிகளை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் போர்க்களத்தில் கொன்றான்.
[2] திதியின் மகன் தைத்தியர்கள், தானுவின் மகன்கள் தானவர்கள். திதியும், தானுவும் தக்ஷனின் மகள்களாவர்.
அசுரன் ஜம்பன் தன்னை விழுங்க வந்த போது, சுழன்று வரும் தேரை நடத்தி, அகன்ற தலை கொண்ட கணைகளைக் கொண்டு அவனது {ஜம்பனுடைய} தலையைக் கொய்தவன் இந்த அர்ஜுனனே. அறுபதாயிரம் நிவாதகவசர்களை வீழ்த்தி, கடலுக்கு அக்கரையைத் (ஹிரண்யபுரம் எனும் தைத்தியர் நகரைத்) துன்புறுத்தியவன் {அழித்தவன்}அவனே {இந்த அர்ஜுனனே}. வலிய கரங்களைக் கொண்டவனும், பகை நகரங்களை வெல்பவனுமான அவனே {இந்த அர்ஜுனனே}, இந்திரன் தலைமையிலான தேவர்களையே வீழ்த்தி {காண்டவ வனத்தில்} அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்தவன் ஆவான்.
இதே போல, இவ்வுலகில், எண்ணிலடங்கா பிற தைத்தியர்களையும், தானவர்களையும் நாராயணனும் கொன்றான். வலிமைமிக்க சக்தியைக் கொண்ட அந்த இருவரை {நரனையும் நாராயணனையும்} போன்றவர்களே, இப்போது ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகக் காணப்படுபவர்கள் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்} ஆவர். ஒருவருக்கொருவர் இப்போது ஒற்றுமையாகக் காணப்படும் இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், அந்தப் பழங்கால தெய்வங்களான அதே தெய்வீக நரனும், நாராயணனுமே ஆவர்.
இவ்வுலகத்திலுள்ளோர் அனைவரைக் காட்டிலும், அசுரர்களாலும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் அவர்களே {அர்ஜுனனும் கிருஷ்ணனுமே}. கிருஷ்ணனே அந்த நாராயணன்.பல்குனனே {அர்ஜுனனே} அந்த நரன்.உண்மையில், அவர்கள் ஈருடலில் இருக்கும் ஒரே ஆன்மா. அவர்கள் தங்கள் செயல்களால் {கர்மத்தால்}, அழிவடையாத நித்திய உலகங்களை அனுபவிக்கின்றனர். இவ்வுலகில் அழிவை ஏற்படுத்தக்கூடிய போர்களுக்கான அவசியம் ஏற்படும்போது, அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். இதன் காரணமாகவே, போரே அவர்களது நோக்கமாக இருக்கிறது.
வேதங்களை அறிந்தவரான நாரதர்,இதையே விருஷ்ணிகளிடம் சொல்லியிருக்கிறார். ஓ! துரியோதனா, கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதத்துடன் கேசவனையும் {கிருஷ்ணனையும்}, பயங்கர வில்லையும் {காண்டீவத்தையும்}, ஆயுதங்களையும் தாங்கி யிருக்கும் அர்ஜுனனையும் எப்போது காண்பாயோ, நித்தியமான, ஒப்பற்றவர்களான அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்கள் என்று பொருளும் இங்கே வரும்} ஒரே தேரில் அமர்ந்திருப்பதை எப்போது காண்பாயோ, ஓ! குழந்தாய் {துரியோதனா}, அப்போது, எனது இந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.
http://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section49.html?m=1
கண்வர் {துரியோதனனிடம்}, "அண்டத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், அழிவற்றவனும் நித்தியமானவனும் ஆவான். அந்த ஒப்பற்ற முனிவர்களான நரனும் நாராயாணனும் அதே போன்றவர்களாவர். *அதிதியின் மகன்கள் அனைவரிலும் விஷ்ணுமட்டுமே நித்தியமானவனாவான்.அவனே வெல்லப்பட முடியாதவனும், அழிவில்லாதவனும், எப்போதும் நிலைத்திருப்பவனும், அனைத்திற்கும் தலைவனும், தெய்வீக பண்புகளைக் கொண்டவனும் ஆவான். சூரியன், சந்திரன், பூமி, காற்று, நெருப்பு, ஆகாயம், கோள்கள் {கிரகங்கள்}, விண்மீன்கள் {நட்சத்திரங்கள்} ஆகிய பிற அனைத்தும் அழிவுக்குகந்தவையே. அண்டத்தின் முடிவு வரும்போது, இவையெல்லாம் மூவுலகில் இருந்தும் விடுபடும். அவை அழிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் படைக்கப்படும். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், உயிர்வாழும் பிற வகை உயிரினங்கள் ஆகிய பிற அனைத்தும், உண்மையில் மனிதர்களில் உலகில் அசைவுள்ள அனைத்தும் குறுகிய வாழ்வு கொண்டவையே.
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section97.html?m=1
இங்கேதான், பதரி என்று அழைக்கப்படும் ஆசிரமத்தில், நாராயணனின் சுயமானகிருஷ்ணனும், மனிதர்களில் மேன்மையான ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, (படைப்பாளனான)பிரம்மனும் நித்தியமாக வசிக்கிறார்கள். {நரன், நாராயணன், பிரம்மன் ஆகியோர் வசிக்கின்றனர்}.
இங்கே, இமயத்தின் மார்பில், யுகத்தின் முடிவில், நெருப்பு போன்ற பெரும் பிரகாசத்துடன் மகேஸ்வரன் சுடர்விட்டு எரிகிறான். புருஷனாக {காலப் புருஷனாக}, அவன் பிராக்ருதியுடன் (அண்டத்தின் தாயுடன்) விளையாடிக் கொண்டிருக்கிறான். நரன் மற்றும் நாராயணனைத் தவிர முனிவர்களின் பல்வேறு வர்க்கங்களாலோ, வாசவனைத் {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, சித்தர்களாலோ காணமுடியாதவனாக அவன் {அந்த சிவன்} இங்கே இருக்கிறான். மாயையால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும், ஆயிரம் தலைகளும், ஆயிரம் கால்களும் கொண்ட நித்தியமான விஷ்ணு மட்டுமே {நரன் மற்றும் நாராயாணனைத் தவிர்த்து} அவனைக் காண முடியும்.
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section111.html?m=1
ராமர் {பரசுராமர்} தொடர்ந்தார்,"இப்படிச் சொல்லப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} போருக்காக மேலும் அழுத்தம் கொடுத்தான். எனினும், அந்த முனிவர்கள் தொடர்ச்சியாக அவனைத் தணித்து, அவனது தொந்தரவைச் சகித்தனர். போரில் விருப்பமுடைய மன்னன் தம்போத்பவனோ அந்த முனிவர்களை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகப் போருக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.
ஓ! பாரதா {துரியோதனா}, பிறகு, நரன்,தன் கைநிறைய புற்குச்சிகளை {சீழ்கம்புல் ஈர்க்குகளை} எடுத்து, "ஓ! க்ஷத்திரியா, போருக்கு விரும்பி இங்கு வந்திருக்கிறாய். வா, வந்து போரிடு! உனது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள். உனது துருப்புகளைச் சேர். இனிமேல் போர் செய்வதற்கான உனது ஆவலை நான் அடக்குகிறேன்" என்றார். அதற்குத் தம்போத்பவன், "ஓ! தவசியே, எங்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு இந்த உமது ஆயுதம் தகுந்ததென்று நீர் நினைக்கிறீர். போரில் விருப்பம் கொண்டு நான் இங்கு வந்திருப்பதால், அவ்வாயுதத்தையே நீர் பயன்படுத்தினாலும், நான் உம்மிடம் போரிடுவேன்" என்றான். இதைச் சொன்ன தம்போத்பவன், தனது துருப்புகளை அனைத்தையும் கொண்டு, அந்தத்தவசியைக் {நரனைக்} கொல்ல விரும்பி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மறைத்தான்.
எனினும், அந்தத் தவசி {நரன்}, அந்தக் குச்சிகளால், பகைவீரர்களின் உடலைச் சிதைக்கவல்ல அந்த மன்னனின் பயங்கரக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தார். அந்த ஒப்பற்ற முனிவர் {நரன்}, பதில்தொடுக்க முடியாததும் குச்சிகளால் ஆனதுமான ஒரு பயங்கர ஆயுதத்தை அந்த மன்னனை {தம்போத்பவனை} நோக்கிச் செலுத்தினார். அங்கே அப்போது நடந்தது, மிகுந்து அற்புதம் நிறைந்ததாக இருந்தது. ஏனெனில், இலக்குத் தவறாதவரான அந்தத் தவசி {நரன்}, தனது மாய சக்தியின் உதவியால், தனது குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி, பகைவீரர்களின் கண்கள், காதுகள் மற்றும் மூக்குகளைத் துளைக்கவும் அறுக்கவும் செய்தார்.
அந்தக் குச்சிகளால் வெண்ணிறமடைந்த முழு வானத்தையும் கண்ட அந்த மன்னன்{தம்போத்பவன்}, அந்த முனிவரின் {நரனின்} பாதத்தில் விழுந்து, "என்னை அருளப்பட்டவனாக இருக்கச் செய்யும்" என்று கேட்டான். ஓ! மன்னா {துரியோதனா}, பாதுகாப்பை அளிக்க எப்போதும் தயங்காத நரன், அந்த ஏகாதிபதியிடம் {தம்போத்பவனிடம்}, "அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து அறம் சார்ந்தவனாக இருப்பாயாக. மீண்டும் இப்படிச் செய்யாதே. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் புலியே {தம்போத்பவா}, பகை நகரங்களையும் வெல்பவனும் மனம் நிறையத் தன் கடமைகளைக் கொண்டுள்ள ஒரு க்ஷத்திரியனுமான மனிதன் ஒருவன், நீ இப்போது இருப்பதைப் போல இருக்கக்கூடாது. உனக்குத் தாழ்ந்தோ, உயர்ந்தோ இருப்பவர்களை, உனது செருக்கின் நிறைவால் எச்சந்தர்ப்பத்திலும் அவமதிக்காதே. அத்தகு நடத்தையே உனக்குத் தகும்.
ஓ! மன்னா {தம்போத்பவா}, அறிவை அடைந்து, பேராசையையும், செருக்கையும் கைவிட்டு, உனது ஆன்மாவை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி, மன்னிக்கும் தன்மை {பொறுமை} மற்றும் பணிவைப் பயின்று, இனிமையானவனாகி, உனது குடிமக்களைப் பேணிக் காப்பாயாக. மனிதர்களின் பலத்தையோ, பலவீனத்தையோ உறுதி செய்து கொள்ளாமல், எத்தகு சூழ்நிலையிலும் யாரையும் அவமதிக்காதே. நீ அருளப்பட்டிருப்பாயாக! எனவே நீ சென்று, மீண்டும் இந்த வழியில் எப்போதும் நடக்காதே. எங்கள் உத்தரவின் பேரில், எப்போதும் உனக்கு நன்மையானவற்றையே அந்தணர்களிடம் விசாரிப்பாயாக"என்றார் {நரன்}.
அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்த ஒப்பற்ற முனிவர்கள் இருவரின் பாதங்களையும் வழிபட்டு தனது நகரத்திற்குத் திரும்பினான். அக்காலத்தில் இருந்து அவன் நீதிபயிலத் தொடங்கினான். உண்மையில், பழங்காலத்தில் நரனால் அடையப்பட்ட சாதனை பெரிதே. மேலும், இன்னும் பல குணங்களின் விளைவாக நரனுக்கு நாராயணன்மேன்மையானவரானார்.
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section96.html?m=1
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், "சஞ்சயனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த உயர் ஆன்ம மன்னன் திருதராஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தனது மகன்களைக் குறித்த {நினைவில்} தியானத்தில் ஆழ்ந்தான். பெரும் சக்தி கொண்ட அவன் {திருதராஷ்டிரன்}, {இப்படிச்} சிந்தித்த பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! சூதனின் மகனே {சஞ்சயா}, அண்டத்தை அழிப்பது காலமே என்பதில் ஐயமில்லை. அனைத்தையும் மீண்டும் படைப்பதும் காலமேயாகும். இங்கே எதுவும் நிலையானதில்லை {நித்தியமில்லை}. அனைத்திலும் ஊடுருவி பரந்திருக்கும் தன்மை பெற்ற {சர்வ வியாபிகளான} நரன் மற்றும் நாராயணனே அனைத்து உயிர்களையும் அழிப்பவர்களாவர்.தேவர்கள் அவனை வைகுண்டன் (அளவிலா வலிமை கொண்டவன்)என்று சொல்கின்றனர். அதே வேளையில் மனிதர்கள் அவனை விஷ்ணு (அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவன்) என்று அழைக்கின்றனர்" என்றான் {திருதராஷ்டிரன்}.
http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-008.html?m=1
பிறகு, பெரும் வியப்பால் நிறைந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரும் பிரம்மனிடம் ஆவலுடன், "ஓ! தலைவா {பிரம்மரே},ஒப்பற்றவரான உம்மால் பணிவுடன் வணங்கப்பட்டவனும், இத்தகு உயர்ந்த வார்த்தைகளால் புகழப்பட்டவனுமான அவன் யார்?நாங்கள் அதைக் கேட்க விரும்புகிறோம்" என்றனர். இப்படிச் சொல்லப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளால் மறுமொழியாக, "தத் என்று அழைக்கப்படுபவன் எவனோ, உயர்ந்தவன் எவனோ, இப்போதும், எப்போதும் இருப்பவன் எவனோ, பரமாத்மா எவனோ, உயிரினங்களின் ஆன்மா எவனோ, பெருந்தலைவன் எவனோ, தேவர்களில் காளைகளே, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனான அவனிடமே நான் பேசிக் கொண்டிருந்தேன். அண்டத்தின் நன்மைக்காக, மனித குலத்தின் மத்தியில், வசுதேவன் குடும்பத்தில் பிறப்பெடுக்கும்படி, அந்த அண்டத்தின் தலைவன் {நாராயணன்} என்னால் வேண்டப்பட்டான்.
நான் அவனிடம் {பிரம்மனாகிய நான் நாராயணனிடம்}, "அசுரர்களின் படுகொலைக்காக மனிதர்களின் உலகில் உன் பிறப்பை எடுப்பாயாக" என்றேன். போரில் கொல்லப்பட்டவர்களும், கொடுமையான வடிவமும், பெரும் பலமும் கொண்டவர்களுமான அந்தத் தைத்தியர்களும், ராட்சசர்களும் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்திருக்கிறார்கள். உண்மையில், ஒப்பற்றவனும், வலிமைமிக்கவனுமான தலைவன் {நாராயணன்}, மனிதக் கருவறையில் பிறந்து, நரனின்துணையுடன் பூமியில் வாழ்வான்.தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் போரிட்டாலும் கூட, புராதனமானவர்களும், முனிவர்களில் சிறந்தவர்களுமான அந்த நரனையும், நாராயணனையும் வீழ்த்த இயலாது.
அளவிலா பிரகாசம் கொண்ட முனிவர்களான அந்த நரனும், நாராயணனும் மனிதர்களின் உலகில் ஒன்றாகப் பிறப்பெடுக்கும்போது மூடர்கள் அவர்களை அறியமாட்டார்கள். எவனுடைய ஆன்மாவில் இருந்து, முழு அண்டத்தின் தலைவனும், பிரம்மனுமான நான் உதித்தேனோ,உலகங்கள் அனைத்தின் தலைமை தெய்வமான அந்த வாசுதேவன்,உங்கள் துதிகளுக்குத் தகுந்தவனாவான். தேவர்களில் சிறந்தவர்களே, பெரும் சக்தி கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவனுமான அவன், வெறும் மனிதன் என்று எப்போதும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது.
தலைமையான புதிர் {பரமரகசியம்} அவனே, தலைமையான புகலிடம் அவனே, தலைமையான பிரம்மம் அவனே, தலைமையான மகிமை அவனே. சிதைவில்லாதவன், தோற்றமில்லாதவன், நித்தியமானவனும் அவனே. யாராலும் புரிந்துகொள்ளப்பட முடியாத அவனே, புருஷன் என்றும் பாடப்படுகிறான். தலைமையான சக்தி என்றும், தலைமையான மகிழ்நிலை என்றும் தேவ தச்சன் {விஸ்வகர்மா} அவனைப் பாடியிருக்கிறான்.
எனவே, இந்திரனைத் தங்கள் தலைமையாகக் கொண்ட தேவர்களோ, அசுரர்கள் அனைவருமோ, அளவிலா ஆற்றல் படைத்த தலைவன் வாசுதேவனை, அவன் ஒரு மனிதன்தானே என ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. வெறும் மனிதன்தானே ரிஷிகேசன் என்று பேசி அலட்சியம் செய்யும் மூட அறிவு கொண்டவன் இழிந்தவன் என்று அழைக்கப்படுவான்.
அந்தத் தெய்வீகமானவனை, படைக்கப்பட்டவையான அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆன்மாவானவனை, (தன் மார்பில்) மங்கலகரமான சக்கரத்தைத் {ஸ்ரீவத்சம் என்ற மறுவைத்}தாங்கியிருப்பவனை, திகைப்பூட்டும் பிரகாசம் கொண்டவனை, தன் நாபியில் (பழங்காலத்} தாமரை உதித்தவனைக் குறித்து அறியாத ஒருவன் மக்களால் இருளில் மூழ்கியவன் {தமோ குணம் கொண்டவன்} என்று சொல்லப்படுகிறான். கிரீடத்தையும், கௌஸ்துப ரத்தினத்தையும் தரித்தவனும், தன் நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான அவனை அவமதிப்பவன் அடர்த்தியான இருளில் {கோரமான அந்தகாரத்தில்} மூழ்குகிறான். தேவர்களில் சிறந்தவர்களே, இந்த உண்மைகள் அனைத்தையும் முறையாக அறிந்த அனைவராலும், உலகங்களின் தலைவனான அந்த வாசுதேவன் துதிக்கப்பட வேண்டும்" என்றான் {பிரம்மன்}.
பீஷ்மர் {துரியோதனனிடம்}தொடர்ந்தார், "பழங்காலத்தில், தேவர்களிடமும், முனிவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்ன ஒப்பற்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பித் தன் வசிப்பிடம் திரும்பினார். பிரம்மனால் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், அப்சரசுகள் ஆகியோர் மகிழ்ச்சியால் நிறைந்து சொர்க்கத்திற்குத் திரும்பினார்கள்.
ஓ! ஐயா {துரியோதனா}, பண்பட்ட ஆன்மா கொண்ட ,முனிவர்களின் சபையில் பழமையானவனான வாசுதேவனைக் குறித்த இவை என்னால் கேட்கப்பட்டன. மேலும், ஓ! சாத்திரங்களை நன்கறிந்தவனே {துரியோதனா}, ஜமதக்னியின் மகனான ராமன் {பரசுராமர்}, பெரும் அறிவு கொண்ட மார்க்கண்டேயர், வியாசர் மற்றும் நாரதர் ஆகியோரிடம் இருந்தும் நான் இதைக் கேட்டிருக்கிறேன்.
இவை யாவற்றையும் அறிந்தும், ஒப்பற்ற வாசுதேவனே நித்தியமான தலைவன் என்றும், உலகங்கள் அனைத்தின் தலைமையான தெய்வம் என்றும், பெரும் உரிமையாளன் என்றும், எவனில் இருந்து பிரம்மன் உதித்தானோ அவனே என்றும், அண்டத்தின் தகப்பன் என்றும் கேட்டும், மனிதர்களால் வாசுதேவன் ஏன் துதிக்கப்படவும், வழிபடப்படவும் கூடாது? ஓ! ஐயா {துரியோதனா}, "வில்தரித்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பாண்டவர்களிடமும் ஒருபோதும் போருக்குச் செல்லாதே" என்று பண்பட்ட ஆன்மாக்களை உடைய முனிவர்களால் முன்பே தடுக்கப்பட்டும், மடமையினால் அஃது உன்னால் புரிந்து கொள்ளப்படவில்லை.
எனவே, நான் உன்னைக் கொடிய ராட்சசன் என்றே கருதுகிறேன். இதுதவிரவும், இருளில் {தமோ குணத்தில்} நீ மூழ்கியிருக்கிறாய். இதனால் தான் நீ கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வெறுக்கிறாய். மனிதர்களின் மத்தியில் வேறு யார்தான் தெய்வீகமான நரனையும், நாராயணனையும் வெறுப்பார்கள்? இதனால் தான், ஓ! மன்னா {துரியோதனா}, அவன் {கிருஷ்ணன்} நித்தியமானவன் என்றும், மங்காதவன் என்றும், அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவன் என்றும், மாற்றமில்லாதவன் என்றும், ஆட்சியாளன் என்றும், அனைத்தையும் படைத்துத் தாங்குபவன் {காப்பவன்} என்றும், உண்மையான இருப்பு என்றும் நான் உனக்குச் சொல்கிறேன்.
http://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-066.html?m=1
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}தொடர்ந்தான், "இந்தப் புனிதக் கதையைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனையும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்தப் பாண்டுவின் மகன்களையும் {பாண்டவர்களையும்} உயர்வாகக் கருத ஆரம்பித்தான்.
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் உமது மகனிடம் {துரியோதனனிடம்} பேசிய சந்தனுவின் மகன் பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, நீ கேட்டவையும், உயர் ஆன்ம கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் நரனின் மகிமை ஆகியவற்றையும் உள்ளபடியே நீ இப்போது கேட்டாய். நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரும், மனிதர்கள் மத்தியில் தங்கள் பிறப்பை எடுத்ததின் நோக்கத்தையும் நீ கேட்டாய். அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} ஏன் வெல்லப்பட முடியாதவர்களாகவும், போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்த வீரர்கள் ஏன் போரில் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்குமான காரணமும் உனக்குச் சொல்லப்பட்டது.
ஒப்பற்ற பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்}, கிருஷ்ணன் பெரும் அன்பைக் கொண்டிருக்கிறான். இதற்காகவே நான், ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, "பாண்டவர்களிடம் சமாதானமேற்படட்டும்" என்று சொல்கிறேன். உன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, (உன்னைச் சுற்றியுள்ள) வலிமைமிக்க உனது சகோதரர்களுடன் பூமியை நீ அனுபவிப்பாயாக. தெய்வீகமான நரனையும், நாராயணனையும் அவமதித்தால், நிச்சயம் நீ அழிவையே அடைவாய்" என்றார் {பீஷ்மர்}
http://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-068.html?m=1
வியாசர் {அஸ்வத்தாமனிடம்},“ஆச்சரியத்தால் என்னிடம் நீ விசாரிக்கும் இந்தக் காரியம் உயர்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். அனைத்தையும் நான் சொல்வேன், கவனமாகக் கேட்பாயாக.(56) நாராயணன் என்று எவன் அழைக்கப்படுகிறானோ, அவன் பழமையானவர்களை விட மிகப் பழமையானவன் ஆவான். ஏதோ சில காரியங்களைச் சாதிப்பதற்காக அந்த அண்டப் படைப்பாளன் {நாராயணன்}, தர்மனின் மகனாகத் தன் பிறப்பை அடைந்தான்.(57) இமய மலைகளில் அவன் {நாராயணன்} கடுமையான தவத்துறவுகளைச் செய்தான். வலிமையும், சக்தியும் கொண்டு, (காந்தியின்) நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான அவன் தன் கரங்களை உயர்த்தியபடி அங்கே நின்று கொண்டிருந்தான்.(58) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன், அறுபத்தாறாயிரம் {60,000} ஆண்டுகள் காற்றை மட்டுமே உண்டு உடல் மெலிந்தான்.(59) மீண்டும் அதைப் போல இரண்டு மடங்கு {12,000} காலம் மற்றொரு வகையிலான கடும் தவத்தைச் செய்த அவன், பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடைப்பட்ட வெளியைத் தன் சக்தியால் நிறைத்தான்.(60)
ஓ! ஐயா {அஸ்வத்தாமா}, அந்தத் தவங்களால், பிரம்மனைப் போல {பிரம்மஸ்வரூபி} [2] ஆன அவன் {நாராயணன்}, அப்போது, அண்டத்தின் தலைவனும், தோற்றுவாயானவனும், பாதுகாவலனும், தேவர்கள் அனைவரின் தலைவனும், உயர்ந்த தெய்வமும், பார்க்கப்பட மிகக் கடினமானவனும், நுண்ணியதைவிட நுண்ணியமானவனும், பெரியதை விடப் பெரியவனும்,(61,62) ருத்ரன் என்று அழைக்கப்படுபவனும், மேன்மையானவர்களின் தலைவனும், ஹரன் என்றும் சம்பு என்றும் அழைக்கப்படுபவனும், தன் தலையில் சடாமுடி தரித்தவனும், ஒவ்வொரு வடிவத்திலும் உயிரை உட்புகுத்துபவனும், அசையாத மற்றும் அசையும் பொருட்கள் அனைத்தின் முதற்காரணனும்,(63) தடுக்கப்பட முடியாதவனும், அச்சந்தரும் தன்மை கொண்டவனும், கடும் கோபமும் பெரும் ஆன்மாவும் கொண்டவனும், அனைத்தையும் அழிப்பவனும், பெரிய இதயம் கொண்டவனும், தெய்வீக வில்லையும், இரண்டு அம்பறாத்தூணிகளையும் கொண்டவனும், தங்கக் கவசம் பூண்டவனும், அளவிலா சக்தி படைத்தவனும்,(64) பினாகை, வஜ்ரம், சுடர்மிக்கத் திரிசூலம், போர்க்கோடரி, கதாயுதம், ஒரு பெரிய வாள் ஆகியவறைத் தரித்தவனும், அழகிய புருவங்களைக் கொண்டவனும், சடைதரித்த கூந்தல் கொண்டவனும்,கனமான குறுங்கதாயுதம் {பரிகம்} தரிப்பவனும், நிலவைத் தன் நெற்றியில் கொண்டவனும்,புலித்தோல் உடுத்தியவனும்,தண்டாயுதம் தரித்தவனும்,(65) அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், புனித நூலாக {யக்ஞோபவீதமாக} பாம்புகளைக் கொண்டவனும், அண்டத்தின் பல்வேறு உயிரினங்களாலும், எண்ணற்ற பூதகணங்களாலும் சூழப்பட்டவனும், ஒருவனே ஆனவனும், தவத்துறவிகளின் வசிப்பிடமானவனும், வயதால் முதிர்ந்த மதிப்புக்குரிய மனிதர்களால் உயர்வாகப் புகழப்படுபவனும்,(66) நீர், சொர்க்கம், வானம், பூமி, சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு ஆகியவை ஆனவனுமான அண்டத்தின் கால அளவேஆனவனை {சிவனைக்} கண்டான்.
[2] “ஒருவன் உலகத்தோடு தொடர்பில்லாமல் இருந்து, உலகத்தோடு தொடர்புடைய அனைத்திலும் மேன்மையாக எழும் நிலையே அது {பிரம்மம் ஆகுதல்} என்று இதற்குப் பொருள் கொள்கிறார் நீலகண்டர்” என்ற இங்கே விளக்குகிறார் கங்குலி.
தீய நடத்தை கொண்ட மனிதர்களால், பிராமணர்களை வெறுப்பவர்கள் அனைவரையும் கொல்பவனும்,முக்தியை அளிப்பவனுமான [3] அந்தப் பிறவியற்றவனின் {சிவனின்} காட்சியைப் பெறவே முடியாது.(67) அறநடத்தை கொண்டவர்களும், பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவர்களும், துயர் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டவர்களுமான பிராமணர்களால் மட்டுமே அவனைத் {சிவனைத்} தங்கள் மனக்கண்ணால் காண முடியும். மங்காதவனும், அறத்தின் வடிவமும், புகழத்தக்கவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான அவனது {சிவனது} காட்சியைத் தன் தவத்துறவுகளின் விளைவால் நாராயணன் அடைந்தான். அனைத்து வகைப் பிரகாசங்களின் அந்த உயர்ந்த வசிப்பிடமானவனும், அக்ஷங்களைத் தன் கழுத்தில் மாலையாக அணிந்தவனுமான அந்தத் தேவனைக் கண்ட வாசுதேவன் {நாராயணன்}, நிறைவடைந்த ஆன்மாவுடன், மகிழ்ச்சியால் நிறைந்து, அதை வார்த்தைகள், இதயம், அறிவு மற்றும் உடல் ஆகியவற்றால் வெளிப்படுத்த முயன்றான். பிறகு அந்தத் தெய்வீகத் தலைவனை {சிவனை}, அண்டத்தின் முதல் காரணனை, வரங்களை அளிப்பவனை, அழகான அங்கங்கள் கொண்ட பார்வதியுடன் விளையாடும் பலமிக்கவனை, பூத கணங்களின் பெருங்கூட்டத்தில் சூழப்பட்ட அந்த உயர்ந்த ஆன்மாவை,(68-70), பிறப்பற்றவனை, உயர்ந்த தலைவனை, வெளிப்படாத வடிவத்தை, அனைத்துக் காரணங்களின் சாரத்தை, மங்காத சக்தி கொண்டவனை {சிவனை} நாராயணன் வழிபட்டான்.
[3] “அம்ருதஸ்ய யோனிம் Amritasya yonim என்று இருக்கிறது. இதற்கு, அழிவின்மையின் மூலம் அல்லது அழிவின்மையின் காரணன் என்றும், அஃதாவது, அழிவின்மையில் உதித்தவன் என்றும் பொருளைக் கொள்ளலாம். எனவே, நீலகண்டரால் விளக்கப்பட்டுள்ளபடி, இந்த வரி ’விடுதலையடைந்து {முக்தி}, பரமாத்மாவைப் போல அழிவற்றவர்கள் ஆவோருக்கு விடிவுக்காலத்தின் தொடக்கமாக இருக்கும் நிலை’ என்பதையே சொல்கிறது” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
அசுரன் அந்தகனை அழித்தவனான ருத்ரனை {சிவனை} வணங்கிய தாமரைக் கண்ணன் நாராயணன்,அர்ப்பணிப்பால் தன் இதயத்தை நிறைத்து, அந்த முக்கண்ணனை (இவ்வார்த்தைகளால்) துதிக்கத் தொடங்கினான்:(71) “ஓ! புகழத்தக்கவனே, ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, உமது முதல் படைப்பான பூமிக்குள் நுழைந்து அதைக் காத்தவர்களும், லோகபாலர்களுமான அனைத்தையும் படைப்பவர்கள் (பிரஜாபதிகள்) அனைவரும் உன்னில் இருந்தே எழுந்தனர்.(72) தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், ராட்சசர்கள் மற்றும் பிற உயிரினங்களோடு கூடிய மொத்த அண்டமும் உன்னில் இருந்தே எழுந்தன என்பதை அறிவோம்.(73) இந்திரன், யமன், வருணன், குபேரன், பித்ருக்கள், தாஷ்டிரி, சோமன் ஆகியோரை நிறைவுகொள்ளச் செய்யப்படும் அனைத்தும் உண்மையில் உனக்கே காணிக்கையளிக்கப்படுகின்றன. வடிவம் மற்றும் ஒளி, ஒலி மற்றும் வானம், காற்று மற்றும் தீண்டல், சுவை மற்றும் நீர், நறுமணம் மற்றும் பூமி[4],(74) காலம், பிரம்மன், வேதங்கள், பிராமணர்கள், இந்த அசையும் மற்றும் அசையாத பொருட்கள் யாவும், உன்னில் இருந்தே எழுந்தன.பல்வேறு நீர் கொள்ளிடங்களில் இருந்து எழும் ஆவிகளே {நீராவிகளே} மழைத்துளிகளாகி பூமியில் விழுந்து ஒன்றிலிருந்து ஒன்று பிரிகின்றன. பிரளயத்தின் போது ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிக்கப்பட்ட அந்தத் தனிப்பட்ட துளிகளே மீண்டும் இணைந்து, இந்தப் பூமியில் பெரும் நீர்ப்பரப்பாகின்றன[5].(75) இவ்வாறே அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும், அழிவையும் நோக்கும் கல்விமான், உன் ஒருமையைப் புரிந்து கொள்கிறான். இரண்டு பறவைகள் (ஈஸ்வரன் மற்றும் ஜீவன்), நான்கு அஸ்வதங்கள் {அரச மரங்கள்}, வார்த்தைகளாலான அவற்றின் கிளைகள் (வேதங்களும், அதன் கிளைகளும்)[6], ஏழு பாதுகாவலர்கள் (ஐம்பூதங்கள், இதயம் மற்றும் அறிவு)[6](76) ஆகியவையும், இந்நகரத்தைத் தாங்கும் வேறு பத்தும் (இந்த உடலில் உள்ள பத்து புலன்களும்) உன்னால் படைக்கப்பட்டவையே எனினும், அவற்றில் இருந்து தனித்தும், அவற்றின் சார்பும் இல்லாதவன் நீயே[7]. எவரும் எந்த ஆதிக்கமும் செலுத்த முடியாத கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியையும், ஏழு உலகங்களும், இந்த அண்டமும் ஆனவன் நீயே.(77) அர்ப்பணிப்புள்ள உமது புகழ்பாடியான என்னிடம் நீ அருள்கூர்வாயாக. என் இதயத்தில் தீய எண்ணங்களை உண்டாக்கி என்னைக் காயப்படுத்தாமல் இருப்பாயாக. ஆன்மாக்களின் ஆன்மாவான நீ அறியப்பட இயலாதவனாக இருக்கிறாய். அண்ட விதையாக உன்னை எவன் அறிவானோ அவன் பிரம்மத்தை அடைகிறான்.(78) ஓ! தேவர்களாலேயே புரிந்து கொள்ளப்பட முடியாதவனே, உன்னை வழிபடவிரும்பி உண்மையான உன் இயல்பை உறுதிசெய்யும் முயலும் நான் {நாராயணனாகிய நான்} உன்னைத் துதிக்கிறேன். என்னால் துதிக்கப்படும் நீ, அடைவதற்கரிதானவையும், நான் விரும்புபவையுமான வரங்களை எனக்கு அளிப்பாயாக. உன் மாயையில் உன்னை மறைத்துக் கொள்ளாதே {கபடம் செய்யாதே}” என்று வேண்டினான் {நாராயணன்}.(79)
[4] “ஐந்து புலன்களால் உணரப்படும் ஐந்து {புலன்நுகர்} தன்மைகள், அவைகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் இயற்கையான ஐம்பூதங்களிலேயே வெளிப்படுகின்றன என்பது பொருள்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.[5] வேறொரு பதிப்பில், “ஸமுத்திர ஜலத்தினின்று நீர்த்திவலைகள் எவ்வாறு வெளிப்பட்டு வேற்றுமையடைந்து, பிரளயகாலத்தில் எவ்வாறு மறுபடியும் அந்த ஸமுத்திரஜலத்தோடேயே ஒன்று சேர்கின்றனவோ அவ்வாறு கற்றறிந்தவர்கள் உம்மிடத்தினின்றே பிரபஞ்சத்தினுடைய உத்பத்தியையும் லயத்தையும் அறிகிறார்கள்” என்றிருக்கிறது.[6] வேறொரு பதிப்பில், “கீழாகப் பரவிச் செல்லுகின்ற கிளைகளோடு கூடிய ஸம்ஸாரரூபமான அரசமரமானது” என்றிருக்கிறது.[7] வேறொரு பதிப்பில், “வஸை, மாம்ஸம், ருதிரம், மேதஸ், மஜ்ஜை, அஸ்தி, சுக்லம்” என்று இவை விளக்கப்படுகின்றன.
வியாசர் {அஸ்வத்தாமனிடம்}தொடர்ந்தார், “அறியமுடியாத ஆன்மா கொண்டவனும், நீலத் தொண்டை கொண்ட தேவனும், பினாகைதாரியும், முனிவர்களால் எப்போதும் புகழப்படுபவனுமான அந்தத் தெய்வீகத் தலைவன் {சிவன்}, வரங்கள் அனைத்திற்கும் தகுந்தவனான வாசுதேவனுக்கு {நாராயணனுக்கு} வரங்களை அளித்தான்.(80) அந்தப் பெரும் தேவன் {சிவன் நாராயணனிடம்}, “ஓ! நாராயணா, என்னருளால், மனிதர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோருக்கு மத்தியில் நீ அளவிலா வலிமையும், ஆன்மாவும் கொண்டவனாக இருப்பாய். தேவர்களோ, அசுரர்களாலோ, பெரும் உரகர்களாலோ, பிசாசங்களாலோ, கந்தர்வர்களாலோ, மனிதர்களாலோ, ராட்சசர்களாலோ, பறவைகளாலோ, நாகர்களாலோ, அண்டத்தில் உள்ள எந்த உயிரினத்தாலோ உன் ஆற்றலைத் தாங்கிக் கொள்ள முடியாது. தேவர்களில் எவராலும் கூட உன்னைப் போரில் வெல்ல முடியாது.(81,83) என்னருளால், ஆயுதத்தாலோ, இடியாலோ, நெருப்பாலோ, காற்றாலோ, ஈரமான அல்லது உலர்ந்த எந்தப் பொருளாலோ, அசையும், அல்லது அசையாத எந்தப் பொருளாலோ எவராலும் உனக்கு எந்த வலியையும் உண்டாக்க முடியாது. எப்போதாவது என்னோடு நீ போரிட்டாலும், என்னிலும் மேன்மையானவனாகவே நீ இருப்பாய்” என்றான் {சிவன்}.(84,85) இவ்வாறே பழங்காலத்தில் சௌரியால் {நாராயணனால்} இவ்வரங்கள் அடையப்பட்டன. அந்தத் தேவனே {நாராயணனே}, தனது மாயையால் அண்டத்தை மயக்கி, இப்போது பூமியில் (வாசுதேவனாக) நடந்து கொண்டிருக்கிறான்.(86)
நாராயணனின் தவத்தால் நரன் என்ற பெயர் கொண்டவனும், நாராயணனுக்கே இணையானவனுமான ஒரு பெரு முனிவன் பிறந்தான். அர்ஜுனன், அந்த நரனே அன்றி வேறொருவனும் அல்ல என்பதை அறிந்து கொள்வாயாக.(87) பழமையான தேவர்களிலும் பழமையானவர்கள் என்று சொல்லப்படும் அந்த முனிவர்கள் இருவரும் {நாராயணனும்- நரனும்}, உலகக் காரியங்களுக்கு உதவி செய்வதற்காக யுகம்தோறும் பிறக்கின்றனர்
http://mahabharatham.arasan.info/2016/12/Mahabharatha-Drona-Parva-Section-202.html?m=1
ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, ஒருவனின சொந்தக் காரியமானது எப்போதும் முக்கியமானதாக இருக்க வேண்டும். உயர் ஆன்மப் பல்குனன் {அர்ஜுனன்}, உண்மைக்கும், அறநெறிக்கும் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறான். அவன் எப்போதும் வெல்ல வேண்டும் என்பதில் ஐயமில்லை.(68) உயர் ஆன்மா கொண்டவனும், தன் கொடிமரத்தில் காளையைக் கொண்ட புனிதமான தேவன் {சிவன்}, எவனால் நிறைவு செய்யப்பட்டானோ, அண்டத்தின் தலைவனான விஷ்ணுவையே தன் தேரின் சாரதியாக எவன் கொண்டுள்ளானோ, ஓ! ஆயிரங்கண் கொண்டோனே {இந்திரா}, அவன் ஏன் வெற்றியடையமாட்டான்? பெரும் மனோசக்தியும், பெரும்பலமும் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, ஆயுதங்களில் சாதித்த, தவத்தகுதி கொண்ட ஒரு வீரனாவான்.(70) பெரும் உடல் சக்தியைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, மொத்த ஆயுத அறிவியலையும் தன்னிடம் கொண்டிருக்கிறான் {அறிந்திருக்கிறான்}. உண்மையில், பார்த்தன் அனைத்து சாதனைகளையும் செய்தவனாவான். தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுபவனாகையால் அவன் வெற்றியே அடைய வேண்டும்.(71)சாதகமவோ, பாதகமாகவோ இருக்கக்கூடிய விதியையே, தன் மகிமையின் விளைவால் மீறக் கூடியவன் பார்த்தன்; அவன் அவ்வாறு செய்கையில், உயிரினங்களுக்குப் பேரழிவு ஏற்படும்.(72) இருகிருஷ்ணர்களும் கோபத்தால் தூண்டப்படும் போது, எதைக் குறித்தும் கவலைகொள்ள மாட்டார்கள். உயிரினங்களில் காளைகளான இவ்விருவருமே, உண்மை மற்றும் உண்மையற்ற பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்கள் ஆவர்.(73) இவ்விருவரும், புராதனமானவர்களும், முனிவர்களில் சிறந்தவர்களுமான நரநாராயணர்கள்ஆவர். அவர்களை ஆட்சி செய்ய எவரும் கிடையாது. அவர்களே அனைவரையும் ஆட்சி செய்பவர்கள் ஆவர். முற்றிலும் அச்சமற்றவர்களான அவர்கள், எதிரிகள் அனைவரையும் எரிப்பவர்களாக இருக்கிறார்கள்.(74) சொர்க்கத்திலோ, மனிதர்களுக்கு மத்தியிலோ அவர்களுக்கு இணையான எவரும் கிடையாது. மூவுலகங்களும், தெய்வீக முனிவர்களும், சாரணர்களும் இவர்கள் இருவரின் பின்னால் இருக்கின்றனர்.(75)
http://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-87.html?m=1
பிருதையின் {குந்தியின்} நீதிமிக்க மகனான அந்தக் குரு குலத் தலைவன் {யுதிஷ்டிரன்}, அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டு, கேவசன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரிடமும்,(25) “நீங்கள் இருவரும், புராதனமானவர்களும், அறத்தை {நீதியைக்} காப்பதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், சிறந்த முனிவர்களுமான நர நாராயணர்கள் என்று நாரதர் என்னிடம் சொன்னார்.(26) பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட தலைவர் கிருஷ்ணதுவைபாயணரான உயர்ந்த அருளைக் கொண்ட அந்த வியாசரும்கூட இந்தத் தெய்வீக வரலாற்றை மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லியிருக்கிறார்.(27) ஓ! கிருஷ்ணா, பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை எதிர்த்து, எவரிடமும் புறமுதுகிடாமல் அவர்களை வென்றிருப்பது உனது செல்வாக்கினாலேயே. போரில் பார்த்தனுடைய சாரதிநிலையை நீ ஏற்றபோதே, தோல்வியையல்ல, வெற்றியையே அடைவோம் என்பது உறுதியாகிவிட்டது” என்றான் {யுதிஷ்டிரன்}.(29)
http://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-96.html?m=1
அத்தேவனிடம் {சிவனிடம்} பேசிய ஜெயத்ரதன், “தங்கள் தேர்களில் இருக்கும் பாண்டுவின் ஐந்து மகன்களையும் போர்க்களத்தில் நான் வீழ்த்த வேண்டும்" என்ற ஓரு வரத்தைக் கேட்டான். எனினும், அந்தத் தேவன் {சிவன்}, “இது நடக்காது" என்றான். மகேஸ்வரன், “அவர்களைப் போர்க்களத்தில் வெல்லவோ, கொல்லவோ யாராலும் முடியாது. எனினும், அர்ஜுனனைத் தவிர்த்து, மீதம் உள்ளவர்களைப் போர்க்களத்தில் உன்னால் (ஒரு முறை மட்டும்) தடுக்க முடியும். வலிய கரங்கள் கொண்ட வீரனான அர்ஜுனன், நரனின் பாணி {Nara styled} கொண்ட தேவ அவதாரமாவான். அவன் {நரனான அர்ஜுனன்} பழங்காலத்தில் பதரியில் தவம் பயின்றவன். தேவனான நாராயணன் அவனது நண்பனாவான். எனவே, தேவர்களாலேயே அவனை வீழ்த்த முடியாது. நானே கூட அவனுக்குப் பாசுபதம் என்ற தெய்வீக ஆயுதத்தை வழங்கியிருக்கிறேன். திசைப்புள்ளிகளின் பத்து லோகபாலகர்களிடம் இருந்து, வஜ்ரம் முதற்கொண்ட பலமிக்கப் பல்வேறு ஆயுதங்களை அவன் {அர்ஜுனன்} பெற்றிருக்கிறான். தேவர்களுக்குத் தலைமை குருவும், எல்லையற்ற ஆவியைக் கொண்ட பெரிய தேவனுமான விஷ்ணுவே {நாராயணனே} குணங்களற்ற தலைமையானவனாவான்.
http://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section270.html?m=1
ஓ அந்தணரே {தௌமியரே}, எதிரிகளை அழிப்பவர்களும், பராக்கிரமம் நிறைந்தவர்களுமான கிருஷ்ணனையும், அர்ஜுனனையும், சக்தி வாய்ந்த வியாசர் எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாரோ அந்த அளவு நானும் அவர்கள் இருவரையும் குறித்து அறிந்து வைத்திருக்கிறேன். வாசுதேவனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} ஆறு பண்புகள் கொண்ட விஷ்ணுவைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன். இது நாரதரும்அறிந்ததே. அவர் {நாரதர்} என்னிடம் இது குறித்து எப்போதும் பேசியிருக்கிறார். அவர்கள் இருவரும் நரன், நாராயணன் என்ற முனிவர்கள்என்பதையும் நான் அறிவேன். திறனுள்ளவன் {அர்ஜுனன்} என்பதை அறிந்தும் நான் அவனை {அர்ஜுனனை} (இப்பணிக்காக {ஆயுதம் அடையும் பணிக்காக}) அனுப்பினேன். இந்திரனுக்குச் சற்றும் குறையாத (பணி முடிக்க) முழுத் திறமை கொண்ட அந்தத் தெய்வ மகனை {son of god}, தேவர்கள் தலைவனைக் {இந்திரனைக்} காணவும், அவனிடம் {இந்திரனிடம்} இருந்து ஆயுதங்களைப் பெறவும் அனுப்பி வைத்தேன்.
http://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section86.html?m=1
Comments
Post a Comment